வேலைக்கு அமர்த்துபவர்களின் எதிர்பார்ப்புகள்

வேலை கிடைப்பது கடினம் என்று இளைஞர்கள் எப்போதும் கூறி வந்தாலும், வேலைக்கான விளம்பரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம்தான் உள்ளன. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் மூலமும், நாளிதழ்கள், இணையதளங்கள் வழியாகவும் வேலைக்கான அறிவிப்புகளை கண்டு விண்ணப்பிக்கும் வேலையும் தொடர்ந்து தடையில்லாமல் நடந்து வந்துகொண்டு இருக்கிறது.
வேலை இருக்கிறது என்றவுடன் விண்ணப்பிக்க தயாராகும் பலரும், நாம் அந்த வேலைக்கு தகுதியானவராக இருக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. மேலும், பல வருடங்கள் வேலை தேடி விரக்தியடைந்த சிலர் எந்த வேலையையும் பார்க்கலாம் என்று, படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலைக்கும் செல்லத் தயாராகின்றனர்.
மக்கள் தொகை பெருகியிருக்கிறது, ஒரே துறையில் படித்தவர்களின் எண்ணிக்கை தேவையை விட அதிகமாகியிருக்கிறது என்பதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ, அதே போன்று இளைஞர்கள் தாங்கள் படித்த துறையில் மேம்பட்ட அறிவை வளர்த்துக்கொள்ளாததும், சரியான நேரத்தில் உகந்த வேலைக்கு விண்ணப்பிக்காததும், அதற்கேற்ற வகையில் தயாராகாததும் வேலை கிடைக்காதற்கு காரணமாகும்.
ஒவ்வொரு துறைக்கும் ஒரு சில சிறப்பு தகுதிகள், தேவைகள் இருந்தாலும் பெரும்பாலான நேர்முகத் தேர்வாளர்களிடம் இருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகளையும், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எப்படி தயாராவது என்பதனையும் காண்போம்.
ஈடுபாடு மற்றும் உடனடி தேவை
ஒரு மாணவன் படிக்க தயாராகும்பொழுது இருக்கும் மனநிலை, படித்து முடித்த பின்னர் இருக்கும் மனநிலை ஆகியவற்றை வேலை தேடும்போது இருக்கும் மனநிலையோடு ஒப்பிடும்பொழுது தான் எடுத்த படிப்பு, எதிர்காலம் குறித்த எண்ணங்களில் மாற்றங்கள் இருக்கும்.
தனது குடும்ப சூழ்நிலை, தற்போதைய தேவைகள் ஆகியவற்றையும் தனது தொடர் ஈடுபாடு எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்து குறிப்பிட்ட வேலை தனக்கு சரியாக வருமா? என முடிவு செய்து விண்ணப்பியுங்கள். குறிப்பிட்ட வேலை குறித்து உங்களுக்கு தெளிவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே தொடர்புகொண்டு சந்தேகத்தினை கேளுங்கள். தயக்கம் வேண்டாம்.
தகுதிக்கேற்ற வேலைக்கு மட்டுமே விண்ணப்பியுங்கள்
நீங்கள் ஐ.டி.ஐ./ டிப்ளமோ / இளநிலை / பொறியியல் என எந்த படிப்பு படித்திருந்தாலும் நீங்கள் படித்த படிப்பிற்கான வேலைகளுக்கே விண்ணப்பியுங்கள். ஏனெனில் நேர்முகத் தேர்வாளர்கள் தாங்கள் எந்த அளவுகோல் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்பத்தான் திட்டமிடுவார்கள்.
மேலும், குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற தகுதியை விட அதிகமான தகுதிகள் பணியாளருக்கு இருக்கும்பொழுது, அந்த பணியாளரின் மனநிலையானது “தனக்கேற்ற வேலை இதுவல்ல, இது தனக்கு சாதாரணம்” என்ற நிலையில் இருக்கும். அதனோடு வேறு பணி கிடைத்தால் உடனடியாக வேலையை விட்டு நின்றுவிடுவர். இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு நேர்முகத்தேர்வாளர்கள் பணிக்கு எடுக்கமாட்டார்கள்.
நேர்முகத்தேர்வாளர்களை அறிந்துகொள்ளுங்கள்
தங்களை நேர்முகம் செய்வது யார் என்பதை அறிந்துகொள்வது எளிதாக பதில் சொல்வதற்கு உதவியாக இருக்கும். எப்படியென்றால் ஒரு மனிதவள நிர்வாகி எதிர்பார்க்கும் பதிலுக்கும், வணிக நிர்வாகி உங்களிடம் எதிர்பார்க்கும் பதிலுக்கும் வித்தியாசங்கள் அதிகம். மனிதவள நிர்வாகி சிறந்த பதிலை உங்களிடம் எதிர்பார்ப்பார், ஆனால் வணிக மேலாளர் உங்களால் எவ்வளவு வருமானத்தை பெற முடியும் என்பதை கணக்கிட்டே உங்களுக்கான தேர்வை நடத்துவார்.
நீங்கள் திறமையான நபராக இருந்தாலும், சரியான நேரத்தில் சொல்லப்படாத பதில் வாய்ப்புகளை இழக்க மூல காரணமாகக்கூட அமையலாம்.
நீங்கள் யார் என்பதை தெரிவியுங்கள்
உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகள், நீங்கள் சாதித்த சாதனைகள், உங்களால் செய்யக்கூடிய சிக்கலான பணிகள் போன்றவற்றை வெளிப்படுத்த தயங்காதீர்கள். ஏனெனில் அந்த சாதனைகள், திறமைகள் தான் உங்களை தனியே அடையாளப்படுத்தும்.
சாதிக்கக்கூடிய இளம் திறமைசாலிகளை நிறுவனங்கள் என்றுமே ஒதுக்குவதில்லை.
விருப்பங்களை தெரிவியுங்கள்
நேர்முகத்தேர்வுக்கு செல்லும் முன், அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள். நிறுவனத்தின் இலட்சியம், அடுத்தடுத்து செயல்பட வைத்திருக்கும் செயல் திட்டங்கள் குறித்து நன்கு ஆராய்ந்து உங்கள் எண்ணங்கள், நிறுவனம் எப்படி எல்லாம் வளர வேண்டும் என நீங்கள் நினைக்கீறீர்களோ அதனை தெளிவாக தெரிவியுங்கள்.
நீங்கள் நிறுவனத்தின் மேல் வைத்திருக்கும் அக்கறை உங்கள் மேல் மரியாதையை ஏற்படுத்தும். நீங்கள் நிச்சயம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு காரணமாக அமையக்கூடும்.
நம்புங்கள்
எந்த நேர்முகத் தேர்வுக்கு சென்றாலும் தன்னம்பிக்கையோடு செல்லுங்கள். ஒரு வேளை நீங்கள் நேர்முகத்தேர்வில் திருப்திகரமாக செயல்படவில்லையென்றாலும், “இந்த நேர்முகத்தேர்வின் அனுபவத்தைக் கொண்டு அடுத்த நேர்முகத்தேர்வில் வெற்றி காண்பேன்” என நம்பிக்கை கொள்ளுங்கள்.
திருப்திகரமாக நேர்முகத்தேர்வு பங்குகொண்ட நிறுவனத்தில் இருந்து பதில் வரவில்லையென்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் தேர்ந்தெடுப்பவர்களின் மனநிலைகள் கூட வாய்ப்புகள் பெற முடியாததற்கு காரணமாக இருக்கலாம். அதற்காக நம்மிடம் திறமை குறைவு என்று தாழ்வு மனப்பான்மையில் உழள வேண்டாம்.
நம்பிக்கையோடு அடுத்தடுத்த சரியான முயற்சிகளில் இறங்குங்கள். வேலை உங்கள் வசமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s