உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை எவ்வளவு?
உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினரின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. படிப்புகளுக்கு தகுந்தாற்போல இந்த உதவித்தொகை மாறுபடும். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து இளங்கலை பட்டப் படிப்பு, ஆசிரியர் படிப்பு படிக்கும் உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் மகனுக்கு ஆண்டுக்கு ரூ.1,750, மகளாக இருந்தால் ரூ.2,250 வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் மகனாக இருந்தால் ரூ.2,000, மகளாக இருந்தால் ரூ.2,500 வழங்கப்படுகிறது. முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மகனுக்கு ரூ.2,250, மகளுக்கு ரூ.2,750, விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்கு ரூ.3,250, மகளாக இருந்தால் ரூ.3,750 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
மருத்துவம் போன்ற தொழில்சார் கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா?
மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை, பொறியியல், சட்டம் போன்ற தொழில்சார் (Professional) படிப்பு பயிலும் மகனுக்கு ஆண்டுக்கு ரூ.2,250, மகளுக்கு ரூ.2,750, விடுதியில் தங்கிப் படிக்கும் மகனுக்கு ரூ.3,250, மகளுக்கு ரூ.3,750 வழங்கப்படுகிறது. அதுபோல மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் முதுநிலை தொழில்சார் கல்வி பயில்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,250, மகளாக இருந்தால் ரூ.4,750, விடுதியில் தங்கிப் பயில்பவராக இருந்தால் ரூ.6,250, மகளாக இருந்தால் ரூ.6,750 வழங்கப்படுகிறது.
பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்புகளுக்கும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை :-
பாலிடெக்னிக் படிக்கும் மகனுக்கு ரூ.1,250, மகளுக்கு ரூ.1,750 வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,450, மகளாக இருந்தால் ரூ.1,950 வழங்கப்படுகிறது. இதே அளவிலான உதவித்தொகை ஐடிஐ மற்றும் ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு படிக்கும் மகன், மகளுக்கும் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை உட்பட அனைத்து உதவித்தொகைகளும் மகன், மகள் மட்டுமின்றி இறந்த மகனின் வாரிசுகளுக்கும் வழங்கப்படும்.