ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…

கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்களின் கல்விக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் உதவித்தொகை வழங்குகிறது .

இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.

கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.
தொலைபேசி எண்: 044-28594780

நீங்கள் அறிவியல் மாணவரா? இதோ உங்களுக்கான KVPY உதவித்தொகை…….

அடிப்படை அறிவியல் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மாதம்தோறும் 5,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை உதவித் தொகைகளை வழங்குகிறது. அறிவியல் துறை சார்ந்த பட்டப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற +1, +2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) எனப்படும் இந்தக் கல்வி உதவித்தொகை மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டது. இளங்கலை முதலாமாண்டு முதல் 5 ஆண்டுகள் அல்லது ஆய்வுப் படிப்பு வரை மாதந்தோறும் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

என்னென்ன படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்?

B.Sc., B.S., B.Stat., B.Math., Int.M.Sc., M.S. in Chemistry, Physics, Mathematics, Statistics, Biochemistry, Microbiology, Cell Biology, Ecology, Molecular Biology, Botany, Zoology, Physiology, Biotechnology, Neurosciences, Bioinformatics, Marine Biology, Geology, Human Biology, Genetics, Biomedical Sciences, Applied Physics, Geophysics, Materials Science or Environmental Science ஆகிய படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
இந்த உதவித்தொகை மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது.

எஸ்.ஏ(SA) பிரிவின் கீழ்,

தற்போது (2015-16)அறிவியல் பிரிவுகளை எடுத்து +1 படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களில் 80% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் 70% எடுத்தால் போதுமானது. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் +2 படிப்பில் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். SC/ST/PWD  பிரிவினர் 50% எடுத்தால் போதும். +2 தேர்ச்சி பெற்று மேற்கண்ட அறிவியல் பிரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்து பட்டப் படிப்பில் சேர்ந்தபிறகே உதவித்தொகை கிடைக்கத் துவங்கும். இடைப்பட்ட காலத்தில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மண்டல மற்றும் தேசிய அளவிலான  அறிவியல் முகாமில் பங்கேற்க வேண்டும்.

எஸ்.எக்ஸ் (SX) பிரிவின் கீழ்

தற்போது +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் (2015-16) விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய மதிப்பெண் தகுதிகளே இந்தப் பிரிவுக்கும் பொருந்தும். +2 முடித்து மேற்கண்ட பிரிவுகளில் பட்டப் படிப்புகளில் சேர்ந்த பிறகு உதவித்தொகை கிடைக்கத் தொடங்கும். எஸ்.பி (SB) பிரிவின் கீழ் இந்தாண்டு (2015-16) மேற்கண்ட பிரிவுகளில் இளநிலை முதலாம் ஆண்டு சேர்ந்து படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கும் மேற்கண்ட தகுதிகள் பொருந்தும். தேர்வு செய்யப்பட்ட ஆண்டில் இருந்தே உதவித்தொகை கிடைக்கத் தொடங்கும்.

எந்த அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்?

விண்ணப்பித்த மாணவர்கள் ஒரு நுண்ணறிவு எழுத்துத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறவேண்டும். இந்தத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும்.

எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?

இளங்கலை பட்டப்படிப்பு காலங்களில் மாதம் 5000 ரூபாயும், அது தவிர ஆண்டுதோறும் உபரி செலவுகளுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படும். முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிப்பவர்களுக்கு மாதந்தோறும் 7000 ரூபாயும் ஆண்டுதோறும் உபரி செலவுகளுக்கு 28,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகைகளை தொடர்ந்து பெற, மதிப்பெண் உள்ளிட்ட நிபந்தனைகளை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும். உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கோடை காலங்களில் அறிவியல் முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் அறிவியல் பாடங்களை ஈடுபாட்டோடு பயிலும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள், அறிவியல் பேராசிரியர்கள் இந்த முகாம்களில் பங்கேற்பார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

http://www.kvpy.iisc.ernet.in/main/index.htm என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் மாதிரித் தேர்வு வினாத்தாள்களையும் பதிவிறக்கம் செய்யமுடியும். பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 1055 ரூபாயும், SC/ST/PWD பிரிவினர் 528 ரூபாயும் செலுத்த வேண்டும்.

நுழைவுத் தேர்வு எந்த அடிப்படையில் நடைபெறும்?

இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 100 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் அமையும். முதல் பிரிவில்,  கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 20 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் தரப்படும். இதில் ஏதேனும் 3 பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டாவது பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 10 வினாக்கள் வீதம் கேட்கப்படும். இப்பிரிவில், மாணவர்கள் ஏதேனும் இரண்டு பிரிவுகளைத் தேர்வு செய்யலாம். பிரிவு ஒன்றில் தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்ணும், பிரிவு இரண்டில் தவறான விடைக்கு 0.5 மதிப்பெண்ணும் குறைக்கப்படும். +2 பாடத் தரத்திலேயே கேள்விகள் அமையும். தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறமுடியாது.

கவனத்தில் கொள்க

விண்ணப்பிக்க வேண்டிய மாதம் : ஆகஸ்ட்
தேர்வு நடைபெறும் மாதம் : நவம்பர்

ஒற்றைப் பெண் குழந்தையா நீங்கள்?

இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை முதுகலை பட்டப் படிப்பு கல்வி உதவித்தொகை

யூஜிசி என சுருக்கமாக அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு பல உதவித்தொகை திட்டங்களை வழங்குகிறது. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களின் ஒற்றைப் பெண்கள் உயர்கல்வி பயிலுவதற்காகத் தனியாக கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக யூஜிசி இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

வீட்டில் ஒரே பெண் குழந்தையாக (Single Girl Child) இருக்க வேண்டும்.

கலை-அறிவியல் பாடங்களில் முதுகலைப் படிப்பு (எம்ஏ, எம்எஸ்சி, எம்காம்.) படிக்க வேண்டும்.

வயது 30-க்குள் இருக்க வேண்டியது அவசியம்.

மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை பெறலாம். ஓராண்டில் 10 மாதங்களுக்கு மட்டும் இது கிடைக்கும்.

ஒரே பெண் குழந்தை என்பதற்கு அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் வாங்கி உறுதிமொழிப் பத்திரத்தை, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது ஆன்லைனிலேயே சமர்ப்பித்து விடலாம்.

 இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள  www.ugc.ac.in என்ற தளத்தில் பார்க்கவும்.